சர்வதேச கிரிக்கெட்டில் 500வது போட்டி; சச்சினின் சாதனையை சமன் செய்யும் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 500வது போட்டியில் விளையாட உள்ளார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகள் என்ற மைல்கல் சாதனையை எட்டும் 10வது வீரர் மற்றும் இந்திய அளவில் நான்காவது வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார். இந்த பட்டியலில், 664 போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் உலக அளவில் முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக மஹேல ஜெயவர்தன 652 போட்டிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதற்கிடையே, இந்தியர்களில் சச்சினை தவிர எம்எஸ் தோனி (538 போட்டிகள்) மற்றும் ராகுல் டிராவிட் (509 போட்டிகள்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி
ஜூலை 20 ஆம் தேதி குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெறவுள்ள, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோலி தனது 500வது போட்டியில் விளையாட உள்ளார். 500வது போட்டி என்பதால், இந்த போட்டியில் அவரது ஆட்டத்தை உண்மையிலேயே மறக்கமுடியாததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுக வீரராக இதில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா சதமடித்ததோடு, அஸ்வின் ரவிச்சந்திரன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மட்டுமே பேட் செய்த நிலையில், அதில் விராட் கோலி 76 ரன்கள் எடுத்திருந்தார்.