'ஆறுதல் கூறாமல், போட்டோ மட்டும் எடுத்து சென்றார்': PT உஷா மீது வினேஷ் போகட் பகீர் குற்றசாட்டு
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷா தனது அனுமதியின்றி மருத்துவமனை படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன்னுடன் புகைப்படம் எடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியுள்ளார். இறுதிபோட்டியன்று காலை எடையிடும் செயல்பாட்டின் போது 100 கிராம் அதிக எடை கொண்டதால், ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த தங்கப் பதக்கப் போட்டியில் இருந்து போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது. "நீங்கள் என்னுடன் நிற்கிறீர்கள் என்பதை அனைவருக்கும் காட்டுவதற்காக, நீங்கள் என்னிடம் சொல்லாமல் ஒரு புகைப்படத்தை கிளிக் செய்துள்ளீர்கள்... பின்னர் அதை சமூக வலைதளங்களில் போட்டுவிட்டீர்கள்... நீங்கள் ஆதரவைக் காட்டுவது அப்படி அல்ல" என்று தற்போது வினேஷ் போகட் கூறினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் போகட்டின் தகுதி நீக்கம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை
தூங்காமல் இருப்பது மற்றும் தலைமுடியை வெட்டுவது உட்பட எடை தேவையை பூர்த்தி செய்ய வினேஷ் முயற்சி செய்த போதிலும், அதிக எடையுடன் காணப்பட்டார். இது யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்த விதிகளின் கீழ் அவர் தகுதியிழப்புக்கு வழிவகுத்தது. அதுமட்டுமின்றி அந்த போட்டியில் அவர் இதுவரை பெற்ற அனைத்து வெற்றிகளையும் ரத்து செய்தது. அவரது எடையைக் குறைக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் வினேஷிற்கு அதீத சோர்வினை ஏற்படுத்தியது. கூடவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சியும் இணைந்து அவர் மூர்ச்சையடைந்தார். அதனைத்தொடர்ந்து அவர், பாரிஸ் விளையாட்டு கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்குதான் PT உஷா, போகட்டினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தில் எடுக்கப்பட்ட தருணம்.
வினேஷ் போகாட் IOA இன் ஆதரவில் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்
IOA விடம் இருந்து தனக்கு உண்மையான ஆதரவு கிடைக்கவில்லை என்றும், அந்த போட்டோ ஆப் பகட்டிற்காக என்றும் போகட் கூறினார். "ஒரு போட்டோ க்ளிக் ஆனது...அரசியலில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நிறைய நடக்கும். அதேபோல அங்கேயும் (பாரீஸில்) அரசியல் நடந்தது. அதனால்தான் மனம் உடைந்து போனது. இல்லையென்றால் மல்யுத்தத்தை விட்டுவிடாதீர்கள் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். நான் எதற்காக தொடர வேண்டும், எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கிறது" என்றார்.
வினேஷ் போகட் ஓய்வை அறிவித்து அரசியலில் இறங்குகிறார்
அவரது தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து, வினேஷ் போகட் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS) பின்னர் அவரது சார்பாக ஒரு கூட்டு வெள்ளிப் பதக்கத்திற்காக IOA தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்தது. இந்தியா திரும்பியதும், அவரது கிராமமான பலாலியில் அவருக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட உள்ளார்.