முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் அறிவிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ், முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான அவர் 2001ஆம் ஆண்டில் தனது 17 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும் 2022 ஆம் ஆண்டில் இறுதிப் போட்டியில் கேப்டனாகவும் செயல்பட்டு மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஷெஃபீல்ட் ஷீல்ட் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்காக மார்ஷ் 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34.31 சராசரியில் 2,265 ரன்கள் எடுத்துள்ளார். அவர் செப்டம்பர் 8, 2011இல் இலங்கைக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். மேலும் 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 40.77 சராசரியில் 2,773 ரன்கள் எடுத்துள்ளார். ஏழு சதங்கள் மற்றும் 15 அரை சதங்களையும் அடித்துள்ளார்.
ஷான் மார்ஷின் உள்நாட்டு கிரிக்கெட் செயல்திறன்
ஷான் மார்ஷ் தனது முன்னாள் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கரை விட மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் எடுத்தவராக முடித்துள்ளார். லாங்கர் 12,780 ரன்களை எடுத்துள்ளார், அதே நேரத்தில் மார்ஷ் 12,811 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், சமீபத்தில் முடிவடைந்த சீசனில், ஷெஃபீல்ட் ஷீல்டில் மார்ஷ் காயம் காரணமாக ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய பிறகு வெளியேறினார். அடிக்கடி காயத்தை எதிர்கொள்ளும் ஷான் மார்ஷ் 2019 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியாவுக்கான அணியில் இடம்பிடித்த போதிலும், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் வெளியேறினார். தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் மிட்செல் மார்ஷ் இவரது சகோதரர் ஆவார்.