இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் வைஷாலி ரமேஷ்பாபு
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு சனிக்கிழமை நடந்த 2023 IV எல்லோபிரேகாட் ஓபனின் போது 2500 மதிப்பீட்டைத் தாண்டி இந்தியாவின் 84வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். இதற்கு முன்னர் இந்தியாவில் இருந்து கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லி மட்டுமே கிராண்ட்மாஸ்டர் ஆன பெண்களாக இருந்த நிலையில், வைஷாலி இப்போது இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் வைஷாலியின் இளைய சகோதரர் ஆர்.பிரக்ஞானந்தா ஏற்கனவே கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ள நிலையில், இப்போது கிராண்ட்மாஸ்டர்களாக இருக்கும் முதல் சகோதர சகோதரிகள் என்ற சாதனையையும் படைத்துள்ளார். வைஷாலி இப்போது 2501.5 புள்ளிகளுடன் மகளிர் தரவரிசையில் தற்போதைய உலகின் 11வது இடத்திலும், இந்தியாவின் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.