யு19 ஆசிய கோப்பை : 52 ரன்களில் நேபாளத்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி
துபாயில் நடைபெற்று வரும் யு19 ஆசிய கோப்பை 2023 தொடரில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா நேபாளை வீழ்த்தியது. முன்னதாக, ஐசிசி அகாடமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் உதய சஹாரன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய நேபாள கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 22.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 52 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ராஜ் லிம்பானி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
8 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்தியா
53 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆதர்ஷ் சிங் மற்றும் அர்ஷின் குல்கர்னி அவுட்டாகாமல் 7.1 ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதன் மூலம், இந்திய அணி குழு நிலையில் தனது அனைத்து போட்டிகளிலும் விளையாடி முடித்துள்ள நிலையில், 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி முதலிடமும், இந்தியா இரண்டாவது இடமும் பெறும். எப்படியிருப்பினும், இந்திய அணி நிச்சயம் முதல் இரண்டு இடங்களுக்குள் முடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.