ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்
சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தனது சகநாட்டவரான ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி நம்பர் 2 இடத்தைப் பிடித்துள்ளார். டிராவிஸ் ஹெட், லீட்ஸில் சமீபத்தில் நடந்த மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் சிறப்பாக விளையாடியதன் மூலம், ஐசிசி தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார். தற்போது டிராவிஸ் ஹெட், உலகின் நம்பர் 1 பேட்டராக உள்ள நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை விட 9 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். ஆஷஸ் 2023 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக டிராவிஸ் ஹெட் 44.33 சராசரியில் 266 ரன்கள் குவித்துள்ளார். சமீபத்திய மூன்றாவது டெஸ்டில், ஹெடிங்லியில் 39 மற்றும் 77 ரன்கள் எடுத்தார்.
மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய பாபர் அசாம்
டிராவிஸ் ஹெட்டை தவிர, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே, இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் முறையே நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் பின்தங்கியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, தற்போது ஓய்வில் இருந்து வரும் ரிஷப் பந்த் பத்தாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் முதலிடத்தில் உள்ள நிலையில், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக நான்கு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.