டிஎன்பிஎல் 2023 : ஒரே ஓவரில் 33 ரன்கள்! த்ரில் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது நெல்லை ராயல் கிங்ஸ்
டிஎன்பிஎல் 2023 தொடரின் குவாலிஃபயர் 2 போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது. திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சிவம் சிங், 46 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 76 ரன்கள் குவித்தார். மேலும் பூபதி குமார் 41 ரன்கள் எடுத்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. 186 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
19வது ஓவரில் 33 ரன்கள் விலாசையா அஜிதேஷ்-ரித்திக் ஜோடி
அஜிதேஷ் குருசாமி சிறப்பாக விளையாடி, இந்த தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு அவருக்கு துணையாக நின்ற நிதிஷ் ராஜகோபால் 26 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, ரித்திக் ஈஸ்வரன் உள்ளே வந்தார். நிதிஷ் வெளியேறும்போது 21 பந்துகளில் 57 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில், துளியும் பதற்றத்தை வெளிக்காட்டாமல் விளையாடிய அஜிதேஷ்-ரித்திக் ஜோடி 19வது ஓவரில் மட்டும் 33 ரன்களை விலாச ஆட்டத்தின் போக்கே மாறியது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரித்திக் சிக்ஸர் அடித்து வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ், இறுதிப்போட்டியில் புதன்கிழமை (ஜூலை12) லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.