பாராலிம்பிக்ஸ் பதக்க மங்கைகளை நேரில் சந்தித்து வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பாரிஸில் ஆகஸ்ட் 28 முதல் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் நான்கு வீரர்கள் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதில் துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகிய இருவரும் மகளிர் எஸ்யு5 பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர். நித்ய ஸ்ரீ சிவன் மகளிர் எஸ்எச்6 ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலம் வென்றார்.
மூன்றாவது முறையாக தொடர்ந்து பதக்கம் வென்ற மாரியப்பன்
தமிழகத்தைச் சேர்ந்த உயரம் தாண்டும் வீரரான மாரியப்பன் தங்கவேலு, இந்த முறை மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். அவர், இதற்கு முன்னதாக 2016 ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம், 2020 டோக்கியா பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மூன்று பேட்மிண்டன் வீராங்கனைகளையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், மாரியப்பன் தங்கவேலுவிடம் தொலைபேசியில் பேசி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.