தமிழக அரசு சார்பில் உலக செஸ் சாம்பியன் டி.குகேஷுக்கு இன்று பாராட்டு விழா
தமிழ்நாடு அரசு, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர் டி.குகேஷுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறது. மாலை 6 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் இந்த விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த வாரம், சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தற்போதைய உலக சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லின்னை வீழ்த்தி, குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரராக குகேஷ் சாதனைப்படைத்துள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற குகேஷிற்கு ரொக்க பரிசு வழங்கும் தமிழக அரசு
தமிழ்நாடு அரசு, குகேஷுக்கு ரூ.5 கோடியான காசோலை வழங்கும் என்றும் அறிவித்துள்ளது. அதோடு, சாம்பியன்ஷிப் மூலம் குகேஷுக்கு கிடைக்கும் வருமானம் 11.34 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பரிசு தொகைக்கு அவர் இந்தியாவில் வரி செலுத்த வேண்டி இருக்கும். குகேஷ் பெற்றுள்ள பரிசுத் தொகைக்கான வரி, எம்.எஸ்.தோனியின் ஐபிஎல் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் குகேஷ், 11.34 கோடி ரூபாய் வென்ற நிலையில், அவர் செலுத்த வேண்டிய வரி ரூ.4.67 கோடியாகும். தோனியின் ஐ.பி.எல். சம்பளமோ ரூ.4 கோடி தான்.