ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக டிம் டேவிட் சேர்ப்பு
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய டி20 அணியில் அசைக்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் அணியில் டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறையாகும்.
இதனால் 2023 அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியாவின் திட்டங்களில் டிம் டேவிட் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இருப்பினும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான தற்காலிக அணியில் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி20யில் சிறந்த வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள டிம் டேவிட், 50 ஓவர் வடிவத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தினால், கடைசி நேரத்தில் அணியில் சேர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
tim david numbers in list a cricket
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அனுபவம் இல்லாத டிம் டேவிட்
சிங்கப்பூரில் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு பிறந்த டிம் டேவிட், 2019 முதல் 2020 வரை சிங்கப்பூர் அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு பிரான்சைஸ் லீக் போட்டிகளிலும் விளையாடிய டிம் டேவிட், 2022 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார்.
டி 20 கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இருந்தாலும், 50 ஓவர் போட்டிகளான லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிகக்குறைந்த அனுபவமே கொண்டுள்ளார்.
இதுவரை 16 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள டிம் டேவிட், 82.77 என்ற சராசரியுடன் 123.14 ஸ்டிரைக் ரேட்டில் 745 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில் ஐந்து அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும்.