
ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறை; திலக் வர்மா பாதியில் ரிட்டயர்ட் அவுட்டாகி வெளியேறியது ஏன்?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 போட்டியின் 16வது போட்டியின் போது, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) அன்று லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் திலக் வர்மா ரிட்டயர்ட் அவுட் செய்யப்பட்டார்.
ரன் சேஸிங்கின், ஒரு அசாதாரண தந்திரோபாய நடவடிக்கையாக இது மாறியது. ஸ்கோரிங் விகிதத்தை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மும்பை இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயித்த 204 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி, ரியான் ரிக்கல்டன் (10) மற்றும் வில் ஜாக்ஸ் (5) ஆகியோரை முன்கூட்டியே இழந்ததால் நெருக்கடியில் சிக்கிறது.
போராட்டம்
ரன் எடுக்க போராடிய திலக் வர்மா
மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் போராடினாலும். நமன் திர் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து மீண்டும் இன்னிங்ஸை மீட்டெடுத்தார்.
இருப்பினும், ஒரு முக்கியமான கட்டத்தில் களமிறங்கிய திலக் வர்மா, ரன் எடுக்க போராடி 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனால், அவரை ரிட்டயர்ட் அவுட் செய்து மிட்செல் சாண்ட்னரை மும்பை இந்தியன்ஸ் களமிறக்கியது.
ஐபிஎல் வரலாற்றில் இதுபோல் ஒரு வீரருக்கு ரிட்டயர்ட் அவுட் கொடுத்து வெளியேற்றுவது இது நான்காவது முறையாகும்.
இதற்கு முன்னர் அதர்வா தைடே, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் மட்டுமே இவ்வாறு வெளியேற்றப்பட்டனர்.
தோல்வி
மும்பை இந்தியன்ஸ் தோல்வி
மிட்செல் சாண்ட்னர் திலக் வர்மாவிற்குப் பதில் களமிறக்கப்பட்டாலும், அவரும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார்.
எனினும் ஒருபுறம் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடி மூலம் மும்பை அணியின் நம்பிக்கையை வெற்றிக்கான உயிர்ப்புடன் வைத்திருந்தார்.
ஆனால் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் பேட்டர்களின் ஆதரவு இல்லாததால் வெற்றியை நெருங்கியும் பெறமுடியாமல் போய்விட்டது.
இதற்கிடையே, கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் 28 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 191/6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியைத் தழுவியது.