டி20 கிரிக்கெட்டில் டபுள் ஹாட்ரிக் சாதனை படைத்த தாய்லாந்தின் திபட்சா புத்தாவோங்
தாய்லாந்தின் 19 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை திபட்சா புத்தாவோங், வெள்ளிக்கிழமை (ஜூலை 14) நெதர்லாந்தில் டபுள் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்தார். நெதர்லாந்தின் உட்ரெட்ச்சில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில், தாய்லாந்து நாட்டில் இடது கை சுழற்பந்து வீராங்கனை புத்தாவோங், தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி டபுள் ஹாட்ரிக் என்ற அரிய சாதனையை செய்தார். இந்த போட்டியில் புத்தாவோங் 3.5 ஓவர்கள் பந்துவீசி 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நெதர்லாந்து 75 ரன்களுக்கு சுருண்ட நிலையில், தாய்லாந்து அணி 13.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டபுள் ஹாட்ரிக் எடுத்த முதல் தாய்லாந்து கிரிக்கெட்டர்
இந்த போட்டியில் டபுள் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததன் மூலம், இந்த அரிய சாதனையை செய்த முதல் தாய்லாந்து கிரிக்கெட்டர் என்ற சாதனையை திபட்சா புத்தாவோங் படைத்துள்ளார். மேலும், ஜெர்மனியின் அனுராதா தொட்டபல்லாபூர் மற்றும் போட்ஸ்வானாவின் ஷமீலா மோஸ்வே ஆகியோருக்குப் பிறகு நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை புத்தாவோங் பெற்றார். ஆடவர் கிரிக்கெட்டில் ரஷித் கான், லசித் மலிங்கா (ஒருமுறை ஒருநாள், டி20 போட்டிகளில் ஒருமுறை), கர்டிஸ் கேம்பர் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகிய நான்கு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனை படைத்துள்ளனர்.