பார்படோஸை தாக்கிய சூறாவளி: T20 உலகக்கோப்பை சாம்பியன்கள் இந்தியா திரும்புவதில் சிக்கல்
ஜூன் 29 சனிக்கிழமையன்று டி20 உலகக் கோப்பை 2024 வென்ற பின்னர், இந்திய அணி இன்று தாயகம் திரும்புவதாக இருந்தது. எனினும் தீவு நாடான பார்படாஸில் சூறாவளி தாக்கியுள்ளதால், அணி இந்தியாவிற்கு திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது. திங்கட்கிழமை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் 'பெரில்' சூறாவளி காரணமாக இன்னும் பார்படாஸில் இருக்கும் இந்திய அணி சிக்கிக்கொள்ளக்கூடும். பெரில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 3 வகை புயல் காரணமாக பார்படாஸில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. பெரில் கரையைக் கடந்தவுடன் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெரில் சூறாவளி: விவரங்கள்
பெரில், 2024 அட்லாண்டிக் பருவத்தின் முதல் சூறாவளி ஆகும். ஞாயிற்றுக்கிழமை காலை பார்படாஸ் நோக்கி திரும்பியபோது சூறாவளி "மிகவும் ஆபத்தான" வகை 3 புயலாக தீவிரமடைந்தது. தேசிய சூறாவளி மையத்தின் கூற்றுப்படி, சூறாவளி வரும் நாட்களில் அதன் பாதையில் நிறைய அழிவைக் கொண்டுவர உள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அல்லது திங்கட்கிழமை முற்பகுதியில் விண்ட்வார்ட் தீவுகளை அடையும் போது, பெரில் வகை 4 சூறாவளி "மிகவும் ஆபத்தான" சூறாவளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. பருவத்தின் முதல் சூறாவளியின் ஆரம்ப நேரம் அசாதாரணமானது. முன்னர் எதிர்பார்க்கப்பட்ட கணிப்பின்படி, முதல் சூறாவளிக்கான சராசரி தேதி ஆகஸ்ட் 11 ஆகும்.