டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து; தொடரிலிருந்து வெளியேறிய அமெரிக்கா
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. சூப்பர் 8 குரூப் 2 போட்டியில் அமெரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி அடைந்ததில், இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மறுபுறம், கிரிக்கெட் உலககோப்பைக்கு முதல்முறையாக தகுதி பெற்ற அமெரிக்கா அணி, புள்ளிகள் அடிப்படையில் போட்டி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் நடைபெற்று வரும் இந்த போட்டித்தொடரில், 'சூப்பர் 8' குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளில், 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளை பெற்று இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
அரையிறுதிக்கு நுழையவிருக்கும் அடுத்த அணி?
இன்று (ஜூன் 24) காலை தொடங்கிய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. இதில் தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 2 ஓவர் முடிவில் 15-2 என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறும்.