டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் யாருக்குக் கோப்பை? நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஐசிசி விதிகள்
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்தியா vs நியூசிலாந்து இடையிலான டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ஆட்டத்தை முடிக்கக் கூடுதல் நேரம் மற்றும் ரிசர்வ் டே வசதிகள் உள்ளது. ஐசிசி விதிகளின்படி, ஒரு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி அதிகாரப்பூர்வமாக முடிவடைய இரு அணிகளும் தலா 10 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும். போட்டி நடைபெறும் நாளில் (மார்ச் 8) மழையினால் தாமதம் ஏற்பட்டால், ஆட்டத்தை முடிக்க கூடுதலாக 120 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை அன்றைய தினம் ஆட்டத்தை நடத்த முடியாவிட்டால், மார்ச் 9 ஆம் தேதி ரிசர்வ் டே அன்று போட்டி தொடரும். ஆட்டம் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டதோ, அங்கிருந்தே மீண்டும் தொடங்கும்.
விதிமுறை
கோப்பை யாருக்கு? ஐசிசி விதிமுறை
ஒருவேளை ரிசர்வ் டே அன்றைய தினமும் மழையினால் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், ஐசிசி விதிகளின்படி கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதற்கு முன்னதாக 2002 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின் போது இந்தியா vs இலங்கை இடையே ஆட்டம் மழையால் ரத்தானபோது, இரு அணிகளும் கோப்பையைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணி 253 ரன்கள் குவித்து அரையிறுதியில் சாதனை படைத்துள்ள நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் அதிரடியாக விளையாடி வருகிறது. எனவே, ரசிகர்கள் ஒரு முழுமையான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்கள்.
வானிலை அறிக்கை
அகமதாபாத் வானிலை அறிக்கை மற்றும் நேருக்கு நேர் மோதல் விவரம்
ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், மார்ச் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டமின்றித் தெளிவாக இருக்கும். இருப்பினும், பகல் நேரத்தில் வெப்பம் 40°C வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இது வீரர்களுக்குச் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 30 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 18 போட்டிகளிலும், நியூசிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை வீழ்த்தாத இந்தியா, இம்முறை சொந்த மண்ணில் அந்தச் சாதனையை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.