மகளிர் டி20 உலகக்கோப்பை : 8 அரைசதங்களுடன் சுசி பேட்ஸ் உலக சாதனை!
2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் இதில் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், சுசி பேட்ஸ், இந்த அரைசதம் மூலம் மகளிர் T20 உலகக்கோப்பைகளில் எட்டு அரைசதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார். அவர் டி20 உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை 36 போட்டிகளில் 1,066 ரன்களை எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 94* ஆகும்.
மகளிர் டி20யில் அதிக ரன் அடித்த வீராங்கனைகள்
டி20 உலகக்கோப்பை வரலாறில் சுசி பேட்ஸை தவிர வேறு எந்த பேட்டரும் 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்ததில்லை. மேலும் சுசி பேட்ஸ் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 4 ஆட்டங்களில் 137 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். இதற்கிடையே மகளிர் டி20 கிரிக்கெட்டில் 143 போட்டிகளில் 3,820 ரன்களை எடுத்து, அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் 3,346 ரன்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.