கிரிக்கெட்டில் முதல் ரெட் கார்டு பெற்ற வீரர் ஆனார் சுனில் நரைன்
கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக ரெட் கார்டு பெற்ற நபர் என்ற மோசமான சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். கால்பந்தில் ரெட் கார்டு மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிலையில், கிரிக்கெட்டில் அதுபோன்ற விதிகள் எதுவும் இல்லை. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் சிபிஎல் தொடரில் மெதுவாக பந்துவீசும் பிரச்சினையை களைய ரெட் கார்டு விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, சரியான நேரத்திற்குள் 17வது ஓவரை வீசி முடிக்கத் தவறினால், 30 யார்டு வட்டத்திற்கு வெளியே 3 வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்படும். 18வது ஓவரை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க தவறினால், 2 பேர் மட்டுமே 30 யார்டு வட்டத்திற்கு வெளியே பீல்டிங் செய்ய முடியும்.
சுனில் நரனை வெளியேற்றிய கீரன் பொல்லார்ட்
19வது ஓவரை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க தவறினால், 30 யார்டு வட்டத்திற்கு வெளியே ஒரு வீரர் மட்டுமே பீல்டிங் செய்ய முடியும்,என்பதோடு ஒரு வீரருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும். அந்த வகையில், சிபிஎல் தொடரில் முதல் ரெட் கார்டை டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) பெற்றது. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பந்துவீசிய நைட் ரைடர்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாததால் ரெட் கார்டு வழங்கப்பட்ட நிலையில், அந்த அணியின் கேப்டன் கீரன் பொல்லார்டு சுனில் நரைனுக்கு ரெட் கார்டை வழங்கி வெளியேற்றினார். எனினும் இந்த போட்டியில், கடைசியில் நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.