தொடர்ந்து புறக்கணித்த அணி நிர்வாகம்; ஓய்வை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். 35 வயதான சுனில் நரைன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் லீக் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக உறுதிப்படுத்தியுள்ளார். சுனில் நரைன், டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தாலும், அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் போது தனக்கென ஒரு பெயரை உருவாக்கவில்லை. அதே நேரம், நரைன் பல்வேறு ஃபிரான்சைஸ் டி20 போட்டிகளில் விளையாடி உலகம் முழுவதும் வெற்றி கண்டுள்ளார்.
சுனில் நரைன் இன்ஸ்டாகிராம் பதிவு
சுனில் நரைன் கிரிக்கெட் புள்ளிவிபரங்கள்
நரைன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 65 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 92 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரது கடைசியாக 2016 அக்டோபர் 5 அன்று ஒருநாள் போட்டியில் விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நரைன், 21 விக்கெட்டுகளை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 51 டி20 போட்டிகளில் விளையாடிய நரைன் 52 விக்கெட்டுகளுடன், தனது அணிக்காக நான்காவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக உள்ளார். மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருந்தாலும், சுனில் நரைன் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் உடற்தகுதி கவலைகள் மற்றும் பந்துவீச்சு சிக்கல்களால் பிரச்சினையை எதிர்கொண்டதால், ஒருகட்டத்திற்கு பிறகு நிர்வாகமே அவரை தவிர்க்க ஆரம்பித்துவிட்டதால், 2019க்கு பிறகு தனது அணிக்காக சர்வதேச போட்டியில் அவர் பங்கேற்கவேயில்லை.