யுவராஜ் சாதனையை நேபாளம் உடைப்பதா? அசோசியேட் டி20 சாதனைகளுக்கு கவாஸ்கர் எதிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் முழு உறுப்பினர் தகுதி பெற்ற முன்னணி அணிகளின் சாதனைகளோடு, கத்துக்குட்டி அசோசியேட் நாடுகளின் போட்டிகளில் நிகழ்த்தப்படும் சாதனைகளை சமமாக வைத்துப் பதிவு செய்வதற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தரத்தில் மிகப்பெரிய இடைவெளி உள்ள அணிகள் மோதும் போட்டிகளின் புள்ளிவிவரங்களுக்குக் குறைந்தபட்சத் தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச சாதனைகளில் தனிப்பிரிவு முறையைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் ஐசிசி-க்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சாதனைப் பட்டியல்
கவாஸ்கர் சுட்டிக்காட்டிய ஆதங்கம்
சர்வதேச ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் (ஜிம்பாப்வே - 344/4), அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (290 ரன்கள்), குறைந்தபட்ச ஸ்கோர் (ஐவரி கோஸ்ட் - 7 ரன்கள்), தொடர்ந்து அதிக வெற்றிகள் (ஸ்பெயின் - 24 வெற்றிகள்) மற்றும் சிறந்த பந்துவீச்சு (பூட்டானின் சோனம் யேஷி - 8/7) போன்ற முக்கிய உலக சாதனைகள் அனைத்தும் பலவீனமான அசோசியேட் நாடுகளின் மோதல்களிலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் மங்கோலிய அணி 13 ரன்களுக்குச் சுருண்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டிய கவாஸ்கர், இத்தகைய ஒப்பிட முடியாத மோதல்களின் பதிவுகள் சர்வதேச அளவில் முன்னிலை பெறுவது ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய யோசனை
டிவிஷன் முறையை அமல்படுத்த யோசனை
'மிட்-டே' நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் இது குறித்து விளக்கியுள்ள கவாஸ்கர், "கால்பந்து லீக் தொடர்களில் டிவிஷன் ஏ, டிவிஷன் பி எனத் தனித்தனி பிரிவுகளும், பதவி உயர்வு மற்றும் தரம் இறக்கும் முறைகளும் உள்ளன".
"அங்கு அந்தந்தப் பிரிவுகளிலேயே சாதனைகள் பதிவு செய்யப்படுகின்றன. அதேபோல கிரிக்கெட்டிலும் உலகக்கோப்பைக்குத் தகுதிபெறும் அணிகள் மற்றும் முழு உறுப்பினர் நாடுகளின் மோதல்களை முதன்மை சர்வதேசப் போட்டிகளாகவும், எஞ்சிய அசோசியேட் அணிகளின் மோதல்களை 'டிவிஷன் ஏ' அல்லது 'டிவிஷன் பி' சர்வதேசப் போட்டிகளாகவும் பிரித்துப் பதிவு செய்ய வேண்டும்".
"அப்போதுதான் சாதனைகளில் தெளிவான வேறுபாடு இருக்கும்" என்று யோசனை தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சாதனை
யுவராஜ் சிங் சாதனை முறியடிக்கப்பட்ட விவகாரம்
தரவரிசையில் கீழ்மட்டத்தில் உள்ள அணிகளுக்கு எதிராக மிக எளிதாக ரன்களைக் குவித்து சாதனைகளைப் படைப்பதை முழு அணிகளுக்கு எதிரான ஆட்டத்தோடு ஒப்பிடுவது நியாயமற்றது என வாதிட்ட கவாஸ்கர், சர்வதேச டி20-யில் அதிவேக அரைசதம் அடித்த யுவராஜ் சிங்கின் சாதனையை நேபாள வீரர் தீபேந்திர சிங் ஐரி மங்கோலியாவுக்கு எதிராக வெறும் 9 பந்துகளில் முறியடித்ததை நினைவுகூர்ந்தார்.
வலுவான அணிகளுக்கு எதிராக 12 பந்துகளில் அடித்த சாதனைக்கும், கத்துக்குட்டி அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதற்கும் இடையே உள்ள தர வேறுபாட்டை கிரிக்கெட் உலகம் உணர்ந்து, புள்ளிவிவரப் பதிவுகளில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.