'ரோஹித் ஷர்மாவுக்கு ஈவு இரக்கமே இல்ல, கப்பு இந்தியாவுக்குத்தான்' : முன்னாள் பாக். வீரர் புகழாரம்
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை (அக்.14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடிய பிறகு, 2011க்கு பிறகு இந்த முறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை தனக்கு வந்துவிட்டதாக சோயப் அக்தர் கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக தங்கள் மேலாதிக்கத்தை தக்கவைத்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த வெற்றியானது 1992 ஆம் ஆண்டு முதல் முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோத தொடங்கியதில் இருந்து, பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா தொடர்ந்து எட்டாவது வெற்றியை பதிவு செய்தது.
Shoaib akthar praises india's victory over pakistan
யூடியூப் சேனலில் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டிய சோயப் அக்தர்
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என வர்ணிக்கப்படும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில், இந்தியாவின் வெற்றி குறித்து பேசினார்.
அதில், "2011 உலகக் கோப்பையின் வரலாற்றை இந்தியா மீண்டும் செய்யப் போகிறது என்று நான் நம்பத் தொடங்குகிறேன். அரையிறுதியில் மட்டும் அவர்கள் குழப்பமடையாமல் கடந்து விட்டார்கள் என்றால், இந்த உலகக்கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும்." என்றார்.
பாகிஸ்தானின் தோல்வி குறித்து பேசிய அக்தர், "பாகிஸ்தானின் அவமானகரமான தோல்வி நம் முன்னே உள்ளது.
இந்தியா பாகிஸ்தானை சிறுவர்களைப் போல எளிதாக வென்றது. என்னால் அதைப் பார்க்க முடியவில்லை. ரோஹித் ஷர்மா இரக்கமின்றி விளையாடினார்." என்று கூறினார்.