
SLvsAFG: மயிரிழையில் சூப்பர் 4 வாய்ப்பையும், இலங்கையுடனான வெற்றியையும் தவற விட்டது ஆஃப்கான்
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பைத் தொடரின் கடைசி குழு சுற்றுப் போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனாகா.
குசால் மெண்டிசஸின் 92 ரன்கள் மற்றும் பதும் நிசங்காவின் 41 ரன்களின் உதவியுடன், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்களைக் குவித்தது இலங்கை அணி.
292 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஃப்கானிஸ்தான் அணி. இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையிலேயே B பிரிவில் உள்ள அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவது முடிவு செய்யப்படும்.
எனவே, இரண்டாவது பேட்டிங் செய்யக் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் தொடக்கதிலிருந்தே அதிரடியாக விளையாடியது.
ஆசிய கோப்பை
அதிரடி காட்டிய ஆஃப்கானிஸ்தான் பேட்டர்கள்:
தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஆகிய இருவரமே சரியான தொடக்கத்தைக் கொடுக்காமல், சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
8 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஃப்கானிஸ்தான். எனினும், அதன் பின்பு களமிறங்கிய ஆஃப்கானிஸ்தானின் மிடில் ஆடர் பேட்டர்களாகிய ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாகிடி மற்றும் முகமது நபி ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இவர்களுள் முகமது நபி 32 பந்துகளில், ஆறு 4 மற்றும் 5 சிக்ஸர்களுடன் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 65 ரன்களைக் குவித்து ஆஃப்கானிஸ்தான் விரைவாக ஸ்கோரை உயர்த்த உதவினார்.
ஆசிய கோப்பை
திணறிய இலங்கை பவுலர்கள்:
சீரிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் பேட்டர்கள் தங்களால் முடிந்தளவு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். விக்கெட்டுகளை அவ்வப்போது சாய்த்தாலும், ரன் ரேட்டை இலங்கை பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இலங்கையின் கேப்டனான தசுன் சனாகா வீசிய 2 ஓவர்களில் மட்டும் 32 ரன்களை அடித்திருந்தனர் ஆஃப்கான் பேட்டர்கள்.
இறுதியில் நஜிபுல்லா ஸாத்ரான் மற்றும் ரஷித் கானின் போராட்டத்தையும் கடந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆஃப்கானிஸ்தான்.
37.1 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்தால் சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பு இருந்தது ஆஃப்கானிஸ்தானுக்கு. இலக்கை கிட்டத்தட்ட நெருங்கி மயிரிழையில் சூப்பர் 4 வாய்ப்பையும், இன்றைய போட்டியையும் தவறவிட்டிருக்கிறது ஆஃப்கானிஸ்தான்.
B பிரிவிலிருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுகின்றன.