44 ஆண்டுகளில் முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை நேரடி தகுதியை இழந்தது இலங்கை
மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023க்கான நேரடித் தகுதியிலிருந்து இலங்கை அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. தோல்விக்குப் பிறகு, ஒருநாள் உலகக் கோப்பை சூப்பர் லீக் அட்டவணையில் இலங்கை 81 புள்ளிகளுடன் இறுதி நேரடி தகுதி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் முடித்தது. இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இலங்கை அணி 44 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஜூன் மாதம் ஜிம்பாப்வேவில் நடக்க உள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்று வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்க முடியும்.
ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கு நேரடியாக தகுதி பெறும் அணிகள்
கிரிக்கெட் உலகக்கோப்பை சூப்பர் லீக் அட்டவணையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். அதன்படி, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. எட்டாவது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது இருந்தாலும், தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து தாங்கள் விளையாடும் போட்டிகளில் பெறும் வெற்றி தோல்விகளின் அடிப்படையில், 8வது இடம் இந்த மூன்று அணிகளில் ஒரு அணிக்கு கிடைக்கும். மற்ற இரண்டு அணிகள், இலங்கையை போல், தகுதிச் சுற்றில் விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே உலகக் கோப்பையில் பங்கேற்க முடியும்.