Sports RoundUp: பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய ஜோடி முதலிடம்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சாதனையைத் தொடர்ந்து, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை எட்டிய முதல் ஜோடி என்ற சாதனை படைத்துள்ளது. முன்னதாக, சீனாவின் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் முதல் பேட்மிண்டன் தங்கப் பதக்கத்தைப் பெற்ற சாத்விக் மற்றும் சிராக், சமீபத்திய BWF உலக தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்தனர். மற்ற இந்தியர்களில், பிவி சிந்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கத்தைத் தவறவிட்டாலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் 2 இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்தார். பிரணாய் எச்.எஸ். ஒரு இடம் பின்தங்கி 8வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து பாகிஸ்தான் சாதனை
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் மிக அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரலாறு படைத்துள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 10) ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை, முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் மற்றும் சமர விக்ரம தலா ஒரு சதமடித்தனர். பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஹசன் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான், அப்துல்லா சபீக் மற்றும் முகமது ரிஸ்வானின் சதங்கள் மூலம் 48.2 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த வங்கதேசம்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் வங்கதேசத்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் 140 ரன்கள் குவித்த நிலையில், சிறப்பாக பந்துவீசிய வங்கதேச வீரர் மஹீதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 48.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய ரீஸ் டாப்லி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
புரோ கபடி லீக் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய கபடி அணி கேப்டன்
மும்பையில் நடைபெற்ற புரோ கபடி லீக் ஏலத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் ரூ.2.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய கபடி கேப்டன் பவன் செஹ்ராவத், புரோ கபடி லீக் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரர் என்ற தனது சொந்த சாதனையை மேலும் மேம்படுத்தியுள்ளார். கடந்த சீசனில் செஹ்ராவத் தமிழ் தலைவாஸால் ரூ. 2.26 கோடிக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டார். ஆனால் முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த சீசன் முழுவதையும் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்தபடியாக, ஈரானின் முகமதுரேசா ஷட்லூயி சியானேவை புனேரி பல்டான் ரூ.2.35 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் பிகேஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
வரலாறு படைத்த இந்திய விளையாட்டு வீரர்கள்; பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினருடன் உற்சாகமான உரையாடலில் ஈடுபட்டார். சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் இதுவரை இல்லாத வகையில், 107 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்தனர். இது குறித்து விளையாட்டு வீரர்களிடையே பேசிய பிரதமர் மோடி, "நீங்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள். 140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். உங்களின் கடின உழைப்பாலும் சாதனைகளாலும் நாடு முழுவதும் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. 2024 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல இது உந்துசக்தியாக இருக்கும்." என்று கூறினார்.