Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள்
சீனாவின் ஹாங்சௌ மாகானத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர் நேற்று (செப்டம்பர் 23) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. அனைத்து நாட்டு வீரர்களும், தங்கள் நாட்டு கொடியினை ஏந்த மைதானத்தை வலம் வந்தனர். இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் கொடியினை ஏந்தி, இந்திய விளையாட்டு வீரர்களை முன்னின்று நடத்திச் சென்றனர். 61 போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஆசியவைச் சேர்ந்த 45 நாடுகளிலிருந்து 12,000 விளையாட்டு வீரர்கள் தற்போது சீனாவின் ஹாங்சொ மாகானத்தில் தற்போது குழுமியிருக்கிறார்கள். 41 விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்காக 655 வீரர்கள் கொண்ட பெரும்படையை அனுப்பியிருக்கிறது இந்தியா. இம்முறை தடகள விளையாட்டுக்களில் பங்கெடுப்பதற்கு மட்டும் 68 வீரர்களை அனுப்பியிருக்கிறது இந்தியா.
தரவரிசை பட்டியல்களில் முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணி:
ஆஸ்திரேலியாவுடன் முதல் வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, ஐசிசியின் அணிகளுக்கான தரவரிசை பட்டியலின் அனைத்து ஃபார்மெட்களிலும் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது இந்திய அணி. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து ஃபார்மெட்களிலும் ஒரே நேரத்தில் முதலிடம் பிடித்ததோடு, இந்த சாதனையை படைத்த அணிகளின் பட்டியலில் இரண்டாவதாக இணைந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. முன்னதாக தென்னாப்பிரிக்க அணி மட்டுமே 2012ம் ஆண்டு ஆகஸ்டில் இங்கிலாந்திடமிருந்து டெஸ்ட் மேஸை தட்டிப் பறித்த போது, முதன் முறையாக இந்த சாதனயைச் செய்தது. தற்போது அதனைத் தொடர்ந்து அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது இந்தியா.
ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி:
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய ஆடவர் அணியானது, சனிக்கிழமை (செப்டம்பர் 23) நடைபெற்ற போட்டியில் தஜிகிஸ்தான் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. முன்னதாக ஏமன் மற்றும் சிங்கப்பூருக்கு எதிரான போட்டிகளையும் 3-0 மற்றும் 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி முன்னேறியிருக்கிறது இந்திய அணி. 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் இந்திய டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்ற நிலையில், இந்த ஆண்டும் பதக்கம் பெறும் முனைப்பில் இருக்கிறது. இன்று டேபில் டென்னிஸ் ரவுண்டு ஆஃப் 16 மற்றும் காலிறுதி போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறது இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி.
ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி:
ஆடவர் டேபிள் டென்னிஸ் அணியைத் தொடர்ந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணியும், ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் நேபாள அணியை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி. முன்னதாக சிங்கப்பூருடனான போட்டியில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது மகளிர் அணி. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருக்கும் ரவுண்டு ஆஃப் 16 சுற்றிலும், அதனை வெற்றிபெறும் பட்சத்தில் காலிறுதி போட்டியிலும் பங்கேற்கவிருக்கிறது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் தங்களது முதல் பதக்கத்தைக் குறிவைத்துக் களமிறங்கியிருக்கிறது இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி.
புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி:
தன்னுடைய சொந்த பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் அமையவிருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த கிரிக்கெட் மைதானத்திற்கான இடத்தைக் கைப்பற்ற உத்திர பிரதேச மாநில அரசு ரூ.121 கோடி செலவழித்திருக்கும் நிலையில், அந்த இடத்தில் ரூ.330 கோடி செலவில் புதிய மைதானத்தைக் கட்டமைக்கவிருக்கிறது பிசிசிஐ. 30,000 பேர் அமரும் வகையில் கட்டமைக்கப்படவிருக்கும் இந்த மைதானத்தின் கட்டுமான பணிகள் 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், முன்னாள் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, பிசிசிஐ தலைவர் ரோடர் பின்னி, துணை-தலைவர் ராஜீவ் ஷுக்லா மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.