ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
பெங்களூரில் நடைபெற்று வரும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 11-வது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை, 23 ரன்களில் வீழ்த்தியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 50 பந்துகளில் 80 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற யுபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய யுபி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் ரன்கள் மட்டுமே எடுத்தது.
'புதிய சீசன்.. புதிய ரோல்..' வைரலாகும் எம்.எஸ்.தோனியின் ஃபேஸ்புக் பதிவு
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், 'புதிய சீசன்.. புதிய ரோல்..' என அவர் குறிப்பிட்டுள்ளது, சிஎஸ்கே அணியில் அவர் புதிய அவதாரம் எடுக்கஉள்ளாரா? அல்லது இது அவரின் கடைசி போட்டி என்பதை சூசகமாக கூறுகிறாரே? என அவரின் ரசிகர்களிடத்தில் பலத்த எதிர்பார்ப்பை அந்த பதிவு ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த ஐபிஎல் போட்டிதான் தோனியின் கடைசி போட்டி என செய்திகள் கூறியது. ஆனால் இந்த தொடரிலும் அவர் களமிறங்கி இருப்பது, அவரின் ரசிகர்களுக்கு ஆறுதலை தந்தது என கூறலாம்
சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, ஐபிஎல் ஏலத்தின் போது ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது சன் ரைசர்ஸ் அணி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சன் ரைசர்ஸ் அணியை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எய்டன் மார்க்ரம் வழி நடத்திவந்தார். தற்போது அவர் நீக்கப்பட்டு, பேட் கம்மின்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபில் தொடரின் 17-வது சீசன் போட்டிகள் வரும் 22-ம் தேதி சென்னையில் தொடங்குகின்றன.
காமன்வெல்த் செஸ் போட்டியில் ஷர்வானிகாவிற்கு தங்க பதக்கம்
சமீபத்தில் மலேசியா செஸ் ஃபெடரேஷன் நடத்திய காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஷர்வானிகா, ராகவ் ஆகிய சிறுவர்கள் வெற்றி பெற்றனர். மலேசியாவின் மெலகா நகரில் நடைபெற்ற இந்த தொடரில், ஹட்சன் செஸ் அகாடமியைச் சேர்ந்த ஷர்வானிகா, ராகவ் பங்குபெற்றனர். அதில், 10 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவில் ஷர்வானிகா 8 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், 14 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவில் ராகவ் 7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.