ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
தமிழகத்தில் நடைபெற்று வரும் 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் நேற்று நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் 500 மீட்டர் டைம் டிரையல் பிரிவில் தமிழகத்தின் ஒட்டாபிடாரத்தைச் சேர்ந்த ஜே. ஸ்ரீமதி (0:39.702) தங்கப்பதக்கம் வென்றார். இரண்டாம் இடத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜி. விம்லா மச்ரா (0:40.211) வென்றார். கோவையைச் சேர்ந்த ஆர். தமிழரசி (0:41.028) மூன்றாம் இடத்தை பிடித்தார். மகளிருக்கான ஸ்பிரின்ட் பிரிவில், தன்யதா, ஸ்ரீமதி, தமிழரசி, சுவேதா ஆகியோரை கொண்ட தமிழக அணி, 1:20.036 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றது. ராஜஸ்தான் அணி (1:20.528) வெள்ளிப் பதக்கமும், மகாராஷ்டிரா அணி (1:20.814) வெண்கலப் பதக்கமும் வென்றன.
கோலிக்கு பதிலாக புஜாரா அணியில் இடம் பெறுவார் என தகவல்
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார். சொந்தக் காரணங்களினால் விராட் கோலி முதல் 2 டெஸ்ட்களிலிருந்து விலகியுள்ளார் என நேற்று பிசிசிஐ அறிவித்தது. இது தொடர்பாக கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் டிராவிட், மற்றும் அணி நிர்வாகம், அணித்தேர்வாளர்களுடன் விராட் கோலி பேசியதாக பிசிசிஐ அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த நிலையில், விராட் கோலிக்கு மாற்று வீரர்களாக, புஜாரா, ரஜத் படீடார், அபிமன்யூ ஈஸ்வரன், மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. புஜாரா கடைசியாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் கடைசியாக இந்திய அணிக்காக ஆடினார்.
ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா- மேத்யூ எப்டன் ஜோடி
மெல்பர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி 3-வது சுற்றில் நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப், குரோஷியாவின் நிக்கோலா மேக்டிக் ஜோடியை 7-6 7-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து, கால் இறுதிசுற்றுக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில், பெலாரஸின் விக்டோரியா அசரன்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஹெஸுடன் மோதினார். இதில் 6-3, 7-6 (7-4), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் டேனியல் மேத்வதேவ் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பவானி தேவியின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டதாக கேலோ இந்தியாவில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் அன்பிலஸ் கருத்து
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பவானி தேவியின் வெற்றிப் பயணத்தால் ஈர்க்கப்பட்டு அவரது பாதையை பின்பற்றி விளையாடி வருவதாக 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் அன்பிலஸ் காட்வின் தெரிவித்துள்ளார். "முன்னணி வீராங்கனையான பவானிதேவியின் வெற்றிகள், இந்த விளையாட்டில் ஒரு பெரியதிருப்பத்தை ஏற்படுத்தியதால், பலர் இதில் ஈடுபட்டு பல்வேறு வெற்றிகளை குவித்துவருகிறார்கள்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.