ஸ்போர்ட்ஸ் ரவுண்டு- அப்: இன்றைய முக்கிய செய்திகள்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நியூஸிலாந்து விளையாடும் டி20 கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் இருந்து, காயம் காரணமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார். நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அந்நாட்டின் கிரிக்கெட் அணியுடன் விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டி தொடரில், டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3-வது ஆட்டம் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டூனிடின் நகரில் நடைபெறுகிறது.
பிஃபா 2023 சிறந்த வீரர்: 3வது முறையாக மெஸ்ஸி தேர்வு
உலக கால்பந்து சம்மேளனமான பிஃபா ஆண்டுதோறும் கால்பந்தாட்டத்தின் சிறந்த வீரர்களுக்கான விருதை வழங்குகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3-வது முறையாக இந்த விருதை அவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்த இடத்தில், வாக்கெடுப்பில் அதிக புள்ளிகளை பெற்றது, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி வீரர் எர்லிங் ஹாலந்து. மறுபுறம், 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை, ஸ்பெயின் கால்பந்து வீராங்கனை அய்டானா பான்மாட்டி பெற்றார்.
இந்தியா ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றிற்கு முன்னேறிய ஹெச்.எஸ்.பிரணாய், பிரியன்ஷு ரஜாவத்
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பிரியன்ஷு ரஜாவத் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 30-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், லக்சயா செனுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பிரியன்ஷு ரஜாவத் 16-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மறுபுறம், ஹெச்.எஸ்.பிரணாய், சீன தைபேவின் டியன் செனை 21-6, 21-19 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார்.
ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில், இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்து வீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட் செய்து வருகிறது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 2 டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.