Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஐபிஏ ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா 17 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது. குத்துச்சண்டை ஆடவர் பிரிவில் ஜடின் (54 கிலோ), சாஹல் (75 கிலோ), ஹர்திக் (80 கிலோ), ஹேமந்த் (80+ கிலோ) ஆகியோர் வெள்ளியும் சிக்கந்தர் (48 கிலோ) வெண்கலமும் வென்றனர். மகளிர் பிரிவில் பாயல் (48 கிலோ), நிஷா (52 கிலோ), அகன்ஷா (70 கிலோ) தங்கமும், அமீஷா (54 கிலோ), வினி (57 கிலோ), சிருஷ்டி (63 கிலோ), மேகா (80 கிலோ), பிராச்சி (80+ கிலோ) ஆகியோர் வெள்ளியும், நேஹா (46 கிலோ), பாரி (50 கிலோ), நேஹா (66 கிலோ), கிருத்திகா (75 கிலோ) வெண்கலமும் வென்றனர்.
இந்திய தொடருக்கான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா
டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (டிசம்பர் 4) தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பையில் விமர்சனத்திற்கு உள்ளாகிய கேப்டன் டெம்பா பவுமாவின் பதவி பறிக்கபப்ட்டதோடு, ஒருநாள் அணியில் அவருக்கு இடமும் வழங்கப்படவில்லை. ஒருநாள் அணியின் கேப்டனாக, தற்போது டி20 கேப்டனாக உள்ள ஐடென் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள டெம்பா பவுமா தற்போது டெஸ்ட் அணியில் மட்டும் கேப்டனாக உள்ளார்.
புரோ கபடி லீக் : புனேரி பல்தான் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி
புரோ கபடி லீக் பத்தாவது சீசனில் திங்கட்கிழமை நடைபெற்ற இரு வெவ்வேறு ஆட்டங்களில் புனேரி பல்தான் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. புனேரி பல்தான் தன்னை எதிர்த்துப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 37-33 என்ற கணக்கில் போராடி வென்றது. புனேரி அணியின் அஸ்லாம் இனாம்தார் 10 ரெய்டு புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதற்கிடையே, மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்கால் வாரியர்ஸ் 32-30 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வெற்றி பெற்றது. நடப்பு லீக் தொடரில் பெங்களூர் புல்ஸ் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.
டென்னிஸ் தரவரிசையில் எட்டாவது முறையாக முதலிடம் பிடித்து நோவக் ஜோகோவிச் சாதனை
நோவக் ஜோகோவிச் திங்களன்று எட்டாவது முறையாக ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஆண்டு இறுதியில் நம்பர் 1 இடத்தைப் பெற்றார். ஜோகோவிச் இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன், ஜூன் மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் மற்றும் செப்டம்பரில் யுஎஸ் ஓபன் ஆகிய மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். இதன் மூலம் தனது கிராண்ட்ஸ்லாம் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தி சாதனை படைத்தார். இதற்கிடையே, விம்பிள்டனில் இறுதிப்போட்டியில் தோற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். விம்பிள்டனில் ஜோகோவிச்சை வீழ்த்திய அல்கராஸ் 2023 ஆம் ஆண்டு இரண்டாம் பீடத்துடன் முடித்துள்ளார். இதற்கிடையே, மகளிர் டென்னிஸ் தரவரிசையில், இகா ஸ்வியாடெக் இரண்டாவது ஆண்டாக ஆண்டு இறுதியில் முதலிடத்துடன் முடித்துள்ளார்.
யு20 ஃபிஃபா உலகக்கோப்பையை நடத்த இந்தோனேசியா விருப்பம்
2025 ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக்கோப்பையை சிங்கப்பூருடன் இணைந்து கூட்டாக நடத்துவதற்கு இந்தோனேஷியா ஆர்வம் தெரிவித்துள்ளது. கால்பந்து உலக நிர்வாகக் குழுவான ஃபிஃபாவுக்கு இது குறித்து அறிக்கை அனுப்ப உள்ளதாக இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ திங்களன்று தெரிவித்தார். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேஷியா, போட்டியில் இஸ்ரேல் பங்கேற்பதற்கு சில அரசாங்க அதிகாரிகளின் எதிர்ப்பின் காரணமாக யு-20 போட்டியை நடத்தும் உரிமையை கடந்த மார்ச் மாதம் பறித்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஆர்வம் தெரிவித்துள்ள இந்தோனேசியா, யு20 மட்டுமல்லாது யு17 உலகக்கோப்பை போட்டியையும் நடத்த ஆர்வம் தெரிவித்துள்ளார்.