Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் அடில் ரஷீத் ஐசிசி ஆடவர் டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக, மூன்றாவது இடத்தில் இருந்த அவர் அடில் ரஷித் முதலிடத்தில் இருந்த ரவி பிஷ்னோய் மற்றும் ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். இதற்கிடையே, டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அதே நேரத்தில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா நான்காவது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் தரவரிசையில் இந்திய வீரரின் முதலிடத்தை பறித்த பாகிஸ்தான் வீரர்
புதன்கிழமை (டிசம்பர் 20) வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஷுப்மன் கில் தன்னுடைய இடத்தை பாபர் அசாமிடம் இழந்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையின்போது பாபர் அசாமிடம் இருந்து முதலிடத்தைக் ஷுப்மன் கில் தொடர்ந்து அந்த இடத்தில் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், விராட் கோலி மூன்றாவது இடத்திலும், ரோஹித் ஷர்மா நான்காவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். பந்துவீச்சு தரவரிசையில் முகமது சிராஜ் மூன்றாவது இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா 5வது இடத்திலும், குல்தீப் யாதவ் 8வது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் டாப் 10 இடங்களில் ஒரு இந்தியர் கூட இல்லை.
பிரான்ஸை வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி
ஆடவர் இந்திய ஹாக்கி அணி 5 நாடுகள் பங்கேற்கும் போட்டியான வலென்சியா 2023இல் தனது நான்காவது மற்றும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. போட்டியில் பிரான்ஸ் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றாலும், இந்திய வீரர்கள் விவேக் சாகர் பிரசாத், ஜுக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதன் மூலம், முதல் பாதி முடிவில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல் அடிக்க, இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த தொடரில் இந்திய ஹாக்கி அணி பெற்ற ஒரே வெற்றி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராஜினாமா
2024 டி20 உலகக்கோப்பைக்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தகுதிபெறத் தவறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் டேவ் ஹொட்டன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "ஜிம்பாப்வே மூத்த ஆடவர் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து டேவ் ஹொட்டனின் ராஜினாமாவை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் உடனடியாக ஏற்றுக்கொண்டது" என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, சமீபத்தில் நடந்த உலகக்கோப்பைக்கான ஆப்பிரிக்க தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணி நமீபியா மற்றும் உகாண்டாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, உலகக்கோப்பை தோல்விகள் மற்றும் தேசிய கட்டமைப்பு குறித்து ஆராய ஒரு குழுவையும் நியமித்துள்ளது.
கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 2023ஆம் ஆண்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுக்கான வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. விளையாட்டுத் துரையின் உச்சபட்ச விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு நட்சத்திர பேட்மிண்டன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்ளிட்ட 26 வீரர்களும், சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா உள்ளிட்ட இதர விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஜனவரி 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் விருது வழங்க உள்ளார்.