Sports Round Up : ஹர்திக் பாண்டியா வெளியேற்றம், கால்பந்து பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் தடை; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களும் எடுத்தனர். ஷாஹீன் அப்ரிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதம் அடித்தாலும், 304 ரன்களில் சுருண்டு தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்
புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியின்போது இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. ஹர்திக் தனது வலது காலால் பந்தை தடுக்க முயன்றபோது அவரது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டு, அவருக்கு ஸ்கேன் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், பிசிசிஐ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில் அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார் என்றும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தரம்சாலாவில் அக்டோபர் 22ஆம் தேதி நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என்றும், அதே லக்னோவில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம்பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரர் டு பயிற்சியாளர்; மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்துள்ள லசித் மலிங்கா
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அனுபவம் கொண்டுள்ள லசித் மலிங்கா தற்போது அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இணைகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய கீரன் பொல்லார்டும் தற்போது அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, லசித் மலிங்கா ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான வெளிநாட்டு லீக் அணிகளான எம்ஐ கேப் டவுன் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகளின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கால்பந்து பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் தடை
காங்கோவைச் சேர்ந்த இளைஞர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜொனாதன் புகாபக்வா, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டுகள் தடை விதித்து பிபா உத்தரவிட்டுள்ளது. காங்கோ கால்பந்து கூட்டமைப்பில் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து ஜொனாதன் புகாபக்வாவுக்கு எதிரான பிபா நெறிமுறைக் குழுவின் விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது விசாரணை முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 20 ஆண்டுகள் தடை விதித்ததோடு, 1,12,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது.
விராட் கோலியின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை வீழ்த்தியது. இதில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 163 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 21வது சதத்தை பதிவு செய்த டேவிட் வார்னர், பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக நான்காவது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக சதங்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி 2017-18 காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.