ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
"இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில், ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான். இரு தினங்களுக்கு முன்னர், இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டது. இதில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர் விடுபட்டது. அதற்கு காரணம், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மறுத்ததால் அவர்களது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. இந்த முடிவை பலரும் வரவேற்ற நிலையில், சிலர் அதனை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகளிர் ஐபிஎல் 2024 : டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியுற்ற RCB அணி
நடைபெற்று வரும் மகளிருக்கான ஐபிஎல் 2024 தொடரின் 7-வது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 43 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அதிரிடியாக விளையாடியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சினாலும், அபாரமான பீல்டிங்கினாலும், RCB அணி வெற்றி பெற இயலவில்லை. எனினும், இது வரை விளையாடிய 3 போட்டிகளில், இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது. இதுவே அந்த அணியின் முதல் தோல்வி. தற்போதைய புள்ளி பட்டியலில் RCB 2 வது இடத்தில் உள்ளது.
ரோனடால்டோவிற்கு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்தது
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. முன்னதாக, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்- நாசர் கிளப்புக்காக விளையாடி வரும் ரொனால்டோ, சில தினங்களுக்கு முன்பு சவுதி புரோ லீக் கால்பந்தாட்ட போட்டியில், அல்-நாசர் அணிக்கு எதிராக விளையாடினார். அப்போது, அல்-நாசர் அணியின் ரசிகர்கள் அவரை நோக்கி "மெஸ்ஸி..மெஸ்ஸி" என கத்தவே, கோபமடைந்த ரொனால்டோ, ரசிகர்களை நோக்கி ஆபாச செய்கை செய்துள்ளார். இதனை அடுத்து, சவுதி அரேபியா கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அவர் அடுத்த போட்டியில் விளையாட தடையும், கூடவே ரூ.4½ லட்சம் அபராதமும் விதித்திருந்தது. இந்த தடை நேற்றுடன் முடிவுற்றது
ப்ரோ-கபடி: புனே- ஹரியானா அணிக்கு இடையே இறுதி போட்டி
10வது ப்ரோ கபடி போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இறுதி போட்டியில், அஸ்லாம் முஸ்தபா தலைமையிலான புனேரி பால்டன், ஜெய்தீப் தாஹியா தலைமையிலான ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன. கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி ஆஹமதாபாத்தில் தொடங்கிய இந்த கபடி போட்டி தொடரில் நாடு முழுவதிலிருந்தும் 12 அணிகள் பங்கு பெற்றன. இந்த நிலையில், இந்த கபடி தொடரின் இறுதி போட்டி இறுதிப்போட்டி ஐதராபாத்தில் இன்று (மார்ச் 1) நடக்கிறது