Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி பங்குபெரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நேற்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியானது நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்களைக் குவித்தது. இந்திய அணியின் சார்பாக ஜெமிமா ரோட்ரிகஸ் அதிகபட்சமாக 82 ரன்களைக் குவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 46.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை சேஸ் செய்து அசத்தியது. இந்த ஒருநாள் தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளும் வான்கடே மைதானத்திலேயே நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்த கிரிக்கெட் வீரர்:
ஆந்திரா மாநிலத்தினை சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. ஐபிஎல்-போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளில் இவர் விளையாடியுள்ளார். 2018 முதல் தற்போது வரை சிஎஸ்கே அணியின் முக்கிய பிளேயர்களுள் இவரும் ஒருவர். இந்நிலையில் கடந்தாண்டு நடந்த ஐபிஎல்'இல் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தினை வென்ற இவர் தனது ஓய்வையும் அறிவித்து, அனைத்துவித போட்டிகளில் இருந்தும் விடைபெற்றார். இதனைத்தொடர்ந்து இவர் அரசியல் பிரவேசம் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. அதன்படி அவர் இன்று(டிச.,28)ஆந்திர முதல்வர்.ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இந்நிகழ்வின்போது, முதல்வரோடு, துணைமுதல்வர் நாராயணசாமி, எம்.பி.க்களான பத்திரெட்டி, மிதுன்ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்கள் இவருக்கு சால்வை அணிவித்து தங்கள் கட்சியில் இணைத்து கொண்டனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி:
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இந்திய அணி. இந்த இரு போட்டிகளில் முதல் போட்டியான, பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது, கடந்த டிசம்பர் 26ம் தேதியன்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்களை மட்டுமே குவித்திருக்க, தென்னாப்பிரிக்க அணியோ 408 ரன்களைக் குவித்து அசத்தியது. இரண்டாவது இன்னிங்ஸில் இலக்கை நிர்ணயிக்கும் ரன்களோடு, கூடுதலாக 163 ரன்களைக் குவிக்க வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது இந்திய அணி. ஆனால், 131 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா:
தென்னாப்பிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் தோல்வியைத் தொடர்ந்து, 2023-25 டெஸ்ட் உலகக்கோப்பைத் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது இந்தியா. ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையுடன், 44.44 வெற்றி சதவிகிதத்தைப் பெற்று ஐந்தாவது இடத்திற்கு இறங்கியிருக்கிறது இந்தியா. இந்த ஒரே ஒரு டெஸ்ட் வெற்றியுடன், 100 சதவிகித வெற்றி வாய்ப்புடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் உலகக்கோப்பைத் தொடருக்கான புள்ளிப்பட்டியலில், முதலிடத்தைப் பெறும் இரண்டு அணிகள், இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை வெல்லும். கடந்த இரண்டு டெஸ்ட் உலகக்கோப்பை போட்டிகளிலும் விளையாடிய இந்திய அணி, இந்த முறையும் டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட வேண்டுமென்றால், தென்னாப்பிரிக்க அணியுடனான அடுத்த டெஸ்ட் வெற்றி அவசியம்.
2024 ரஞ்சி கோப்பைத் தொடர்:
உள்நாட்டு முதல் நிலை கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பைத் தொடரானது, 2024 ஜனவரி 5ம் தேதியன்று தொடங்குகிறது. 38 அணிகள் இரண்டு பிரிவுகளின் கீழ் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. 8 அணிகள் அடங்கிய நான்கு குழுக்கள் எலைட் பிரிவின் கீழும், 6 அணிகள் அடங்கிய ஒரே குழு பிளேட் பிரிவின் கீழும் விளையாடவிருக்கிறது. ஒவ்வொரு அணியும், தங்களது குழுவிற்குள்ளே இருக்கும் அணிகளுடன் தலா ஒரு முறை மோதவிருக்கின்றன. அந்தப் போட்டிகளில் அணிகள் பெரும் புள்ளிகளின் அடிப்படையில், காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். கடந்த முறை ரஞ்சி கோப்பையை சௌராஷ்டிரா அணி வெற்றி பெற்று, இந்த முறை கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.