
Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
செய்தி முன்னோட்டம்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியானது, இந்திய அணியை முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.
இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியை எதிர்நோக்கிக் களமிறங்குகிறது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியானது, கடைசியாக 2007ம் ஆண்டே சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறது. அதன் பிறகு, இந்தியாவில் நடைபெற்ற 9 ஒருநாள் தொடர்களிலும் இந்திய பெண்கள் அணி தோல்வியையே தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்:
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து, சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான 37 வயது டேவிட் வார்னர்.
தற்போது பாகிஸ்தானுடன் சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா. முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், வரும் ஜனவரி 3ம் தேதியன்று இரு அணிகளுக்குமிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டியுடன் டேவிட் வார்னரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் அவர்.
மல்யுத்தம்
விளையாட்டு அமைச்சகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த மல்யுத்த சம்மேளனத் தலைவர்?
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரன் சிங்கிற்கு எதிராக பாலியல் புகாரில், மல்யுத்த வீரர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட, அந்த அமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின், மல்யுத்த சம்மேளன தலைவராக சில புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டதையடுத்து, விளையாட்டு அமைச்சகத்தின் விதிகளுடன் மல்யுத்த சம்மேளனம் ஒத்துப்போகவில்லை எனக் கூறி, மல்யுத்த சம்மேளனத்தையே தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது இந்திய விளையாட்டு அமைச்சகம்.
இந்நிலையில், தாங்கள் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை எனக் கூறியிருக்கும் மல்யுத்த சம்மேளனத் தலைவர் சஞ்சய் சிங், விளையாட்டு அமைச்சகத்தின் இடைநீக்கத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்திருக்கும் ஸ்டீவ் வாக்:
வரும் பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபெறவிருக்கிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி. அந்தத் தொடருக்கு 14 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவித்திருந்தது அவ்வாரியம்.
அந்தப் பட்டியலில், 7 புதிய வீரர்களின் பெயர்களை இணைத்திருந்தது தென்னாப்பிரிக்கா. அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள், SA20 கிரிக்கெட் தொடரில் விளையாடப் பதிவு செய்திருப்பதால், அவர்களை விடுத்து புதிய வீரர்களை நியூசிலாந்திற்கு தேர்வு செய்திருக்கிறது தென்னாப்பிரிக்கா.
அந்த வாரியத்தின் இந்த நடவடிக்கையை, அவமரியாதையானது என விமர்சித்திருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக், ஐசிசி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கிரிக்கெட்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி:
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது தென்னாப்பிரிக்கா.
அதனைத் தொடர்ந்து, நாளை இவ்விரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கவிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட வெற்றி பெறாத நிலையில், இந்த வருடமும் அதனைத் தகர்ப்பதற்கான வாய்ப்பு பறிபோயிருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மனதில் கொண்டு, இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்க கேப்டவுன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது இரண்டாவது டெஸ்ட் போட்டி.