Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான புதன்கிழமை (ஜனவரி 3) முடிவில் இரண்டு இன்னிங்ஸ்கள் முடிந்து மூன்றாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தொடங்கிய தென்னாப்பிரிக்காவை 55 ரன்களில் இந்திய கிரிக்கெட் அணி சுருட்டியது. முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா 153 ரன்களுக்கு சுருண்டது. விராட் கோலி அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். ஷுப்மன் கில் 36 ரன்களும், ரோஹித் ஷர்மா 39 ரன்களும் எடுத்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களுடன் களத்தில் உள்ளது.
ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கு இரண்டு இந்திய கிரிக்கெட்டர்களின் பெயர்கள் பரிந்துரை
ஐசிசி விருதுகள் 2023க்கு இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதன்கிழமை பரிந்துரைக்கப்பட்டனர். 2023ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரருக்கான நான்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவும் இடம் பெற்றுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2023ஆம் ஆண்டின் ஐசிசியின் வளர்ந்து வரும் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்காக பரிந்துரைக்கப்பட்டார். இதேபோல் மகளிர் கிரிக்கெட் பிரிவில், ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட சாமரி அட்டபட்டு, சோஃபி எக்லெஸ்டோன், ஹெய்லி மேத்யூஸ் மற்றும் முன்னாள் ரேச்சல் பட்டத்தை வென்ற எலிஸ் பெர்ரி ஆகியோர் சிறந்த வீராங்கனைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு மருஃபா அக்தர், லாரன் பெல், டார்சி கார்ட்டர் மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் தனித்தனி கேப்டன்களை அறிவித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணங்களுக்கு முன்னதாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் புதன்கிழமை அறிவித்தனர். பேட்டிங் ஆல்-ரவுண்டர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் கேப்டனாகவும், 28 வயதான குசல் மெண்டிஸ் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்குவார் மற்றும் 26 வயதான வனிந்து ஹசரங்க டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்படுவார். இலங்கையில் மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் தனித்தனியான கேப்டன்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் பெற்ற மோசமான தோல்விக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் அணியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் டாப் 10இல் விராட் கோலி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, புதன்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 9வது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக, மார்ச் 2022இல் அவர் கடைசியாக டாப் 10 இடங்களுக்குள் இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாப் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க டெஸ்டில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 38 மற்றும் 76 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த உயர்வை பெற்றுள்ளார். இதற்கிடையே, ரோஹித் ஷர்மா 4 இடங்கள் பின்தங்கி 14வது இடத்தில் உள்ளார்.
41 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
புதன்கிழமை சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது நம்பர் 9 இடத்தில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அமர் ஜமால் சாதனை படைத்தார். முன்னதாக, 220 ரன்களுக்கு ஏழு என்ற நிலையில் அணி தடுமாறியபோது களத்திற்கு வந்த ஜமால், 97 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். அவர் 9 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்தார், முதல் டெஸ்ட் அரை சதத்தை எட்டினார். இதற்கு முன்னர், 1972ல் அடிலெய்டில் வாசிம் பாரி 113 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்ததே ஒன்பதாவது இடத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்நிலையில், இந்த 41 ஆண்டு கால சாதனையை அமர் ஜமால் முறியடித்துள்ளார்.