Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடைபெற்ற ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். 161 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது. விரிவாக படிக்க
விஜய் ஹசாரே கோப்பையில் மத்திய பிரதேசத்தை வென்றது தமிழ்நாடு கிரிக்கெட் அணி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை 2023 லீக் போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மத்திய பிரதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில் பாபா இந்திரஜித் மட்டும் 92 ரன்கள் குவித்த நிலையில், மற்ற வீரர்கள் சொதப்பியதால் 195 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் சாய் கிஷோர் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியைத் தழுவியது. இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். விரிவாக படிக்க
புரோ கபடி லீக் : தபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
அகமதாபாத்தில் நடந்து வரும் புரோ கபடி லீக் பத்தாவது சீசனில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-31 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது. ஆரம்ப நிமிடங்களில் சம ஸ்கோருடன் ஆட்டத்தை தொடங்கிய தலைவாஸ், முதல் பாதியில் டெல்லியை ஆல்-அவுட் செய்தது. இதன் மூலம் முதல் பாதியில் 18-14 என முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியில் டெல்லி மேலும் ஒரு முறை ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தலைவாஸ் ஆட்டத்தை கட்டுப்படுத்தி, மிகவும் எளிதாக போட்டியை வென்றது. தலைவாஸ் அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா பவார் 17 ரெய்டு புள்ளிகளுடன் சூப்பர் 10 புள்ளிகள் மற்றும் 3 தடுப்பாட்ட புள்ளிகளைப் பெற்று அணியில் வெற்றியில் முக்கிய பங்களித்தார்.
புரோ கபடி லீக் : பெங்களூரை வீழ்த்தியது குஜராத் ஜெயன்ட்ஸ்
புரோ கபடி லீக் பத்தாவது சீசனில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில், குஜராத் ஜெயன்ட்ஸ் பெங்களூரு புல்ஸை 34-31 என்ற கணக்கில் போராடி தோற்கடித்தது. பெங்களூர் அணி ஆரம்பத்தில் குஜராத்தை ஆல்-அவுட் செய்ததால் வரை இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் பாதியில் பெங்களூர் 20-14 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் குஜராத் திருப்பிக் கொடுத்து பெங்களூரை ஆல் அவுட் ஆக்கியதோடு ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் சூப்பர் டேக்கிள்ஸ் மூலம் வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் இது குஜராத் அணிக்கு இரண்டாவது வெற்றியாகும். முன்னதாக சனிக்கிழமை நடந்த தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்க வெஸ்ட் இன்டீஸுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி சென்றுள்ளது. இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பேட்டர்கள் அபாரமாக விளையாடி 48.5 ஓவர்களில் இலக்கை எட்டினர். சாய் ஹோப் கடைசி வரை அவுட்டாகாமல் 109 ரன்கள் குவித்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரண்டாவது அதிகபட்ச சேசிங் வெற்றியாகும்.