
விஜய் ஹசாரே கோப்பை : மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி
செய்தி முன்னோட்டம்
விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மத்திய பிரதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முன்னதாக, தானேவில் உள்ள தாதோஜி கொண்டதேவ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழகம் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தமிழக அணியில் பாபா இந்திரஜித் அபாரமாக விளையாடி 92 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
இதன் மூலம் 49.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. மத்திய பிரதேச அணியில் ராகுல் பாதாம், சரண்ஸ் ஜெயின் மற்றும் ஷுபம் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
VHT 2023 Tamilnadu beats Madhya Pradesh by 17 runs
178 ரன்களில் சுருண்டது மத்திய பிரதேசம்
196 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேச அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் அனைவரும் தமிழக கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அதன் பின் களமிறங்கிய ரஜத் படிதார் நிலைத்து நின்று 73 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் யாரும் கை கொடுக்காததால் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தமிழக அணியின் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோர் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து, விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணி தனது கடைசி லீக் போட்டியில் செவ்வாய்க்கிழமை நாகாலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது.