
இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : இந்தியா வெற்றி; 4-1 என தொடரை கைப்பற்றியது
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (டிச.3) பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து 53 ரன்கள் எடுத்தார்.
மேலும், ஜிதேஷ் ஷர்மா 24 ரன்களும், அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்த நிலையில், இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் பென் ட்வார்ஷூயிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Australia lost to India by 6 runs
ஆஸ்திரேலியா போராடி தோல்வி
161 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜோஷ் பிலிப் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய பென் மெக்டெர்மாட்டுடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார்.
டிராவிஸ் ஹெட் 28 ரன்களில் அவுட்டானாலும், பென் மெக்டெர்மாட்அரைசதம் கடந்து 54 ரன்கள் சேர்த்தார்.
அதன் பின் வந்தவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும், மேத்யூ வேட் கடுமையாக போராடி இலக்கை நோக்கி அணியை நகர்த்தினார்.
கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என இருந்த நிலையில், அவரும் அவுட்டாக, இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. இதன் மூலம் இந்தியா தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது.