Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் மழையால் தடைபட்டது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும், ரிங்கு சிங் அவுட்டாகாமல் 68 ரன்களும் எடுத்தனர். நீண்ட நேரமாக பெய்த மழை ஓய்ந்த பின்னர், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 13.5 ஓவர்களில் இலக்கை எட்டி தென்னாப்பிரிக்கா வென்றது.
யு19 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் முத்தரப்பு தொடர் மற்றும் வரவிருக்கும் ஐசிசி ஆடவர் யு19 உலகக்கோப்பை 2024க்கான யு19 இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு தொடர் 2023 டிசம்பர் 29 முதல் 2024 ஜனவரி 10 வரை திட்டமிடப்பட்டுள்ளது. முத்தரப்பு தொடருக்குப் பிறகு, இந்தியா யு19 அணி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளைத் தொடங்கும். உலகக்கோப்பையில் இந்தியா வங்கதேசம், அயர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் குழு ஏ இல் உள்ளது. மேலும், யு19 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் ஜனவரி 20, 2024 அன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. விரிவாக படிக்க
யு19 ஆசிய கோப்பை 2023 : அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
துபாயில் நடைபெற்று வரும் யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 23 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 52 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்கத்தில் ரன் எடுக்கவில்லை. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராஜ் லிம்பானி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 ஓவர்களுக்குள் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மேலும் அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது. விரிவாக படிக்க
எஃப்ஐஎச் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதிக்கு தகுதி
மலேசியாவில் நடைபெற்று வரும் எஃப்ஐஎச் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா ஆரம்பத்தில் தடுமாறியது. முதல் பாதி முடிவில் நெதர்லாந்து 2-0 என முன்னிலை பெற்ற நிலையில், அதன்பிறகு ஆக்ரோஷ ஆட்டத்திற்கு மாறிய இந்தியா இரண்டாவது 4 பாதியில் கோல்களை அடித்தது. இதற்கிடையே, இரண்டாவது பாதியில் நெதர்லாந்து அணியால் கூடுதலாக ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்த நிலையில், இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொள்ள உள்ளது. விரிவாக படிக்க
இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான அரசின் நடவடிக்கை ரத்து
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) இடைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை டிஸ்மிஸ் செய்த நடவடிக்கையை இலங்கையின் விளையாட்டு அமைச்சர் செவ்வாயன்று ரத்து செய்தார். இது குறித்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழுவை நியமிப்பதற்கான முடிவை ரத்து செய்யும் உத்தரவில் நான் கையெழுத்திட்டேன். இது எங்கள் ஐசிசி இடைநீக்கத்தை நீக்குவதை நோக்கமாகக் கொண்டது." என்று தெரிவித்துளளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையின் போது வாரியம் செய்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான தணிக்கை அறிக்கை குறித்து ஐசிசியிடம் கேட்டுள்ளதாக பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.