ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற எஃப்ஐஎச் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை காலிறுதியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. முன்னதாக, போட்டியின் முதல் பாதியில் டிமோ போயர்ஸ் (5வது நிமிடம்) மற்றும் பெபிஜ்ன் வான் டெர் ஹெய்டன் (16வது நிமிடம்) ஆகிய இருவரும் பெனால்டி கார்னர்களை வெற்றிகரமாக கோலாக மாற்றியதால், நெதர்லாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றது. இருப்பினும், இரண்டாவது பாதியில் இந்திய ஹாக்கி அணி மிகவும் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கியது மற்றும் ஆதித்யா அர்ஜுன் லலாகே (34வது நிமிடம்), ஆராய்ஜீத் (35வது நிமிடம்) கோல் அடித்து சமன் செய்தார்.
அரையிறுதியில் ஜெர்மனியை எதிர்கொள்ளும் இந்தியா
இரு தரப்பும் சமநிலையில் கடுமையாக போராடிய நிலையில், நெதர்லாந்தின் முன்னிலையை மீட்டெடுக்க மூன்றாவது கால் இறுதிக்கு ஒரு நிமிடம் முன்னதாக பெனால்டி கார்னர் மூலம் ஹார்டென்சியஸ் கோல் அடித்தார். எனினும், 52வது நிமிடத்தில் சௌரப் குஷ்வாஹா இந்தியாவுக்காக கோல் அடித்து சமன் செய்த நிலையில், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, பெனால்டி கார்னரில் உத்தம் சிங் கோல் அடித்து முன்னிலை பெற்றதோடு, வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார். இந்திய அணியின் கோல்கீப்பர் ரோஹித் கடைசி காலிறுதியில் நெதர்லாந்து அணியின் அடுத்தடுத்த ஆறு முயற்சிகளை தடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்ததால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது.