பிபா உலகக்கோப்பை வென்றதை பார்க்காமலேயே மறைந்த தந்தை; ஸ்பெயின் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) இங்கிலாந்துக்கு எதிரான பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது. இதில் ஸ்பெயின் அணிக்காக கோல் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்த ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனா தனது தந்தையின் மரணம் குறித்து இரண்டு நாட்கள் கழித்து போட்டிக்கு பின்பே அறிந்துள்ளார். மகளிர் கால்பந்தில் ஸ்பெயின் அணியின் முதல் பெரிய வெற்றிக்கு வழிநடத்திய கார்மோனாவின் தந்தை, கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். எனினும், முக்கியமான இறுதிப்போட்டி இருந்ததால், போட்டி முடியும் வரை இந்த தகவலை அவரிடம் தெரிவிக்க வேண்டாம் என குடும்பத்தினர் முடிவு செய்து ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.
ஓல்கா கார்மோனாவின் எக்ஸ் பதிவு
ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், அவரது தந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், அவரிடம் போட்டிக்கு பிறகே தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளது. மேலும் கார்மோனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து, கார்மோனா ஸ்பானிஷ் கால்பந்து வரலாற்றில் இடம் பெறுவார் எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இறுதிப்போட்டிக்கு பிறகு கார்மோனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தனித்துவமான ஒன்றைச் சாதிக்க நீங்கள் எனக்கு பலத்தை அளித்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். இன்றிரவு நீங்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் என்னைப் பற்றி பெருமைப்படுகிறீர்கள். அமைதியாக இளைப்பாருங்கள் அப்பா." எனத் தெரிவித்துள்ளார்.