துப்பாக்கிச் சுடுதலுக்காக மருத்துவ படிப்பை பாதியில் விட்ட தங்க மங்கை சாம்ரா; சுவாரஸ்ய பின்னணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்க மங்கையாக ஜொலித்த சிஃப்ட் கவுர் சாம்ரா, தனது துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு மீதான ஆர்வம் காரணமாக மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா தங்கம் வென்றார். பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட்டைச் சேர்ந்த 23 வயது பெண்ணான இவர், முழுநேரமாக துப்பாக்கிச் சூட்டில் கவனம் செலுத்துவதற்காக தான் படித்து வந்த மருத்துவ இளங்கலை படிப்பை பாதியில் கைவிட்டுள்ளார். அதன் பின்னர், தற்போது அமிர்தசரஸில் உள்ள ஜிஎன்டியுவில் உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளில் இளங்கலை படிப்பை படித்து வருவதோடு, துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்காக சாதனை படைத்துள்ளார்.
மருத்துவ படிப்பை கைவிட்டது குறித்து பேசிய சிஃப்ட் கவுர் சாம்ரா
இந்தியாவில், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர குடும்பங்களின் போக்கு பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கல்வியில் சிறந்து விளங்குவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் மருத்துவம் படித்துக் கொண்டே துப்பாக்கிச் சுடுதலிலும் சிஃப்ட் கவுர் சாம்ரா சிறப்பாக செயல்பட்டதை பார்த்த அவரது பெற்றோர், சாம்ரா முழுமையாக விளையாட்டில் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய அவர், "எம்பிபிஎஸ் படிப்பை கைவிட்டது என்னுடைய முடிவு அல்ல. அது என் பெற்றோரின் முடிவு." என்றார். மேலும், தனது உறவினர் தன்னை தற்செயலாக இந்த விளையாட்டில் அறிமுகப்படுத்தியதாகவும், ஆரம்பத்தில் 10 மீட்டர் நிகழ்வுகளில் பங்கேற்று, பின்னர் 3பியை தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.