ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் செப்டம்பர் 2023க்கான ஐசிசியின் சிறந்த மாதாந்திர வீரர் விருதை பெற்றார். செப்டம்பர் மாதத்தில் 80 என்ற உச்சபட்ச சராசரியில் 480 ரன்களை எடுத்ததன் மூலம், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. மேலும், இந்த ஆண்டு முழுவதுமே அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த விருதுக்கு ஷுப்மன் கில்லுடன், மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த டேவிட் மாலன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, டெங்கு பாதிப்பால் அவதிப்பட்டு வரும் ஷுப்மன் கில், ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை.
சிறந்த வீராங்கனையாக சாமரி அட்டப்பட்டு தேர்வு
ஆடவர் பிரிவில் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கையின் சாமரி அட்டபட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக, அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து வரலாற்று ரீதியிலான முதல் தொடர் வெற்றியை இலங்கை அணி பதிவுசெய்ததில் அவர் முக்கிய பங்கு வகித்ததன் மூலம், இந்த விருதை பெற்றார். டி20 தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டை கைப்பற்றியதன் மூலம் இலங்கை இந்த சாதனையை செய்தது. ஆல்ரவுண்டரான அட்டப்பட்டு 114 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இந்த தொடரின் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.