வலைப்பயிற்சியில் திடீர் அசம்பாவிதம்! ஷுப்மன் கில்லுக்கு காயம்; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பாரா?
செய்தி முன்னோட்டம்
திருவனந்தபுரத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து வலது முழங்கையில் பலமாகத் தாக்கியது. இதனால் கடும் வேதனையடைந்த ஷுப்மன் கில், உடனடியாக பயிற்சியை நிறுத்திவிட்டு வெளியில் வெளியேறினார். அவருக்கு இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் உடனடியாக முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். இதன் காரணமாக முதல் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போதைய நிலைமை
மருத்துவ சிகிச்சை மற்றும் ஷுப்மன் கில்லின் தற்போதைய நிலைமை
காயமடைந்த ஷுப்மன் கில்லுக்கு கையில் கட்டுப் போடப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து பேட்டிங் செய்யாமல் ஓய்வெடுத்தார்.
இருப்பினும், பயிற்சிக்குப் பிறகு அவர் சாதாரணமாக நடந்து சென்றதுடன் சக வீரர்களுடன் சிரித்துப் பேசியது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
போட்டி தொடங்க இன்னும் குறைந்த நேரமே உள்ள நிலையில், பிசிசிஐ இக்காயம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதனால் அவர் முதல் போட்டியில் களமிறங்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காயங்கள் மற்றும் சவால்கள்
இந்திய அணியைத் தொடரும் காயங்கள் மற்றும் சவால்கள்
இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த ஆண்டில் வீரர்களின் காயம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது ஷுப்மன் கில்லும் காயமடைந்துள்ளது அணி நிர்வாகத்திற்கு பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் முழு உடல்தகுதியைப் பெற்று மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு வலுசேர்த்துள்ளது.
பயிற்சியாளர்
பயிற்சியாளர் மோர்னே மோர்கலின் நேர்மறையான கருத்துகள்
வீரர்களின் காயம் குறித்துப் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், முக்கிய வீரர்கள் காயமடைவது துரதிர்ஷ்டவசமானது என்றாலும், அணியில் திறமையான மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர் என்று கூறினார்.
இளம் வீரர்களுக்குத் தங்களை நிருபிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஷுப்மன் கில்லின் உடல்தகுதி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவர் உடல்தகுதி பெறத் தவறினால் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராகக் களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.