காயத்திற்கு அறுவை சிகிச்சை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதுகு காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே 2023 ஐபிஎல் தொடர் மற்றும் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முழுவதுமாக இழப்பார். ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போவின்படி, ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முழுநேர கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், அறுவை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார் என்றும், அவர் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் குறைந்தது மூன்று மாதங்களுக்கு வெளியே இருப்பார் என்று கூறப்படுகிறது. தொடர்ச்சியான கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் அவரை கடந்த மாதம் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் இறுதி டெஸ்டில் இருந்து வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் விலகினார்.
ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் தயாராவாரா?
ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக, டிசம்பரில் இந்தியாவின் வங்கதேச சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, அதே காயம் காரணமாக அவர் பிரச்சினைகளை சந்தித்தார். இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் முதுகுத்தண்டில் உள்ள வட்டு ஒன்றில் ஏற்பட்ட வீக்கத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவரது கீழ் முதுகில் வீக்கத்தை அனுபவித்தார். இது அவருக்கு சிக்கல்களை அதிகப்படுத்திய நிலையில், முதுகில் உள்ள வலியை குறைக்க அவருக்கு ஊசி போடப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு மாதக் கணக்கில் ஓய்வெடுக்க வேண்டி இருக்கும் என்பதால், அக்டோபரில் இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.