Loading...
ஆசிய விளையாட்டு 2026: இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் அணி வெள்ளி வென்று அசத்தல்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஏர் ரைஃபிள் மகளிர் அணியினர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டு 2026: இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் அணி வெள்ளி வென்று அசத்தல்

எழுதியவர் Vasuki
Sep 20, 2026
01:10 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 அய்ச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சோனம் உத்தம் மாஸ்கர், தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவன் மற்றும் விதர்ஷா வினோத் ஆகியோர் இணைந்த இந்தியக் கூட்டணி மொத்தம் 1898.0 புள்ளிகள் குவித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தைப் பதிவு செய்துள்ளது. சீனா 1904.2 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

நூலிழையில் ஜப்பானை வீழ்த்திய இந்தியா

நூலிழையில் ஜப்பானை வீழ்த்திய இந்தியா

வெள்ளிப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணிக்குத் தொடக்கத்திலிருந்தே போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் கடும் நெருக்கடி அளித்தது.

இறுதியில் ஜப்பான் அணி 1897.1 புள்ளிகள் குவித்த நிலையில், வெறும் 0.9 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தியது.

மூன்று வீராங்கனைகளின் தகுதிச் சுற்றுப் புள்ளிகளை ஒருங்கிணைத்துக் கணக்கிடப்பட்ட இந்த இறுதிப் பட்டியலில், இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத்திய அபாரக் கூட்டு முயற்சி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது.

இறுதிச் சுற்றுக்கு தகுதி

வீராங்கனைகளின் தனிநபர் செயல்பாடுகள்

இந்திய வீராங்கனைகளில் சோனம் 634.1 புள்ளிகள் குவித்து தனிநபர் பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.

மூன்றாவது முறையாக ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இளவேனில் வளரிவன் 633.5 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இவர்கள் இருவரும் தனிநபர் இறுதிச் சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

முதன்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் களமிறங்கிய கேரளத்தைச் சேர்ந்த 27 வயதான விதர்ஷா வினோத் 630.4 புள்ளிகளுடன் 12-வது இடத்தைப் பிடித்தார்.

தனிநபர் இறுதிப் போட்டிக்கு இவர் தகுதி பெறாவிட்டாலும், குழு வெள்ளிப் பதக்கத்தை இந்தியா வெல்வதற்கு இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது.

ADVERTISEMENT

சாதனை

புதிய பிரிவில் விதர்ஷாவின் அசாத்திய சாதனை

வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்துப் பேசிய விதர்ஷா வினோத், தனிநபர் பிரிவில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், இந்திய அணிக்குப் பதக்கம் தேடித் தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

50 மீட்டர் ரைபிள் 3-பொசிஷன்ஸ் பிரிவே தனது முதன்மையான களம் என்றும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பயிற்சியைத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறுகிய காலப் பயிற்சியிலும் பெரும் சர்வதேச மேடையில் பதற்றமின்றி தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வெல்ல உதவியது பெருமிதம் அளிப்பதாகவும், தனது முதன்மைப் பிரிவான 50 மீட்டர் போட்டியில் தங்கம் வெல்லக் கடுமையாக உழைப்பேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ADVERTISEMENT