ஐபிஎல் 2023 : விராட் கோலி, டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்
2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் எட்டாவது ஆட்டத்தில் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டன் புதிய சாதனை படைத்துள்ளார். ஷிகர் தவான் இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், ஐபிஎல்லில் 50 முறை ஐம்பது பிளஸ் ஸ்கோரைப் பெற்ற மூன்றாவது வீரர் ஆனார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் இருந்த வரை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரப்சிம்ரன் சிங் வெளியேறியதும் வேகத்தை கூட்டிய தவான் 36 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இது ஐபிஎல்லில் அவரது 48வது அரைசதமாகும்.
ஐபிஎல்லில் ஷிகர் தவான் புள்ளி விபரங்கள்
ஐபிஎல்லில் 48 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்களுடன் தவான் 50 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். டேவிட் வார்னர் 56 அரைசதங்கள் மற்றும் 4 சதங்கள் எடுத்துள்ள நிலையில், விராட் கோலி 45 அரைசதங்கள் மற்றும் 5 சதங்களை எடுத்துள்ளார். இதற்கிடையே, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார். ராயல்ஸுக்கு எதிராக 22 போட்டிகளில் ஏபி டி வில்லியர்ஸ் 652 ரன்கள் குவித்த நிலையில், தவான் இப்போது 23 போட்டிகளில் 33.10 சராசரியுடன் 662 ரன்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.