மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தலா 5 தொடர் நாயகன் விருது வென்ற முதல் வீரர்; ஷாகிப் அல் ஹசன் சாதனை!
ஆப்கானிஸ்தானின் வங்கதேச சுற்றுப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) முடிவடைந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணி இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் எளிதான வெற்றியுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது. முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆப்கான் கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் வென்றாலும், டி20 தொடரில் முழுமையாக வீழ்த்தப்பட்டனர். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் தொடர் நாயகன் விருதை வென்றார். ஷாஹிப் அல் ஹசன் இரண்டு டி20 போட்டிகளில் 132.14 சராசரியில் 37 ரன்கள் எடுத்ததோடு, நான்கு விக்கெட்டுகளையும் எடுத்தார்.
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் குறைந்தபட்சம் 5 தொடர் நாயகன் விருதுகள்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்றதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களிலும் குறைந்தது ஐந்து தொடர் நாயகன் விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றார். அவர் இதுவரை டெஸ்டில் ஐந்து முறையும், ஒருநாள் போட்டிகளில் ஏழு முறையும், டி20 போட்டிகளில் ஐந்து முறையும் இந்த விருதை வென்றுள்ளார். விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 20 தொடர் நாயகன் விருதுகளுடன் அவரை விட முன்னிலையில் இருந்தாலும், இதுபோல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தலா ஐந்து விருதுகளை பெறவில்லை.