16 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! ஆசிய விளையாட்டு 2026-இல் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் அாய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவிற்குத் தடகளப் பிரிவில் முதல் பதக்கம் கிடைத்துள்ளது. வியாழக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற மகளிருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை சீமா குமாரி இலக்கை 32 நிமிடங்கள் 50.05 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்த போட்டியில் பஹ்ரைனின் வின்ஃப்ரெட் யாவி தங்கப் பதக்கத்தையும், ஜப்பானின் நோஸோமி தனகா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
16 வருட காத்திருப்பு
16 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த 25 வயது வீராங்கனை
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் மகளிருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில், கடந்த 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
16 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்துள்ள 25 வயதான சீமா குமாரி, போட்டியின் இறுதி சுற்றுகளில் தனது முழு வேகத்தையும் வெளிப்படுத்தி மற்ற எதிராளி வீராங்கனைகளைப் பின்னுக்குத் தள்ளினார்.
இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுத் தொடரின் தடகளப் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்து பெருமை சேர்த்துள்ளார்.
சீமா குமாரி
இமாச்சல பிரதேசத்தில் தொடங்கி சர்வதேச மைதானம் வரை சீமா குமாரியின் பயணம்
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 2001-இல் பிறந்த சீமா குமாரி, இந்தியாவின் முன்னணி நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.
கடந்த 2024-இல் ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய க்ராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கமும், 2025 உலகப் பல்கலைக்கழக விளையாட்டில் 5,000 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்தவர்.
மேலும் இந்த ஆண்டு கலிஃபோர்னியாவில் நடைபெற்ற தொடரில் 10,000 மீட்டரை 32:02.43 வினாடிகளில் கடந்து தனது வாழ்நாளின் மிகச் சிறந்த தனிநபர் நேரத்தையும் பதிவு செய்து அசத்தியுள்ளார்.
எதிர்பார்ப்பு
இந்தியத் தடகள அணியின் பதக்கக் கனவும் எதிர்பார்ப்புகளும்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமளவில் பதக்கங்களை அள்ளித் தரும் முதன்மைத் துறையாகத் தடகளம் இருந்து வருகிறது.
கடந்த முறை சாங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியத் தடகள வீரர்கள் 6 தங்கம் உட்பட மொத்தம் 29 பதக்கங்களைக் கைப்பற்றிப் வரலாற்று சாதனை படைத்திருந்தனர்.
தற்சமயம் சீமா குமாரி வென்றுள்ள இந்த முதல் வெண்கலப் பதக்கம், இந்தியத் தடகளப் படைக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளதால், வரும் நாட்களில் இந்தியாவிற்கு மேலும் பல தடகளப் பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.