சிட்னி மைதானத்தில் நுழைவு வாயிலுக்கு சச்சின் பெயரை வைத்து கௌரவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளையொட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டெண்டுல்கர்-லாரா நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டன. இதன் மூலம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம் பெற்ற முதல் ஆஸ்திரேலியர் அல்லாத வீரர்கள் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா பெற்றுள்ளனர். டெண்டுல்கர் மற்றும் லாராவின் பெயரிடப்பட்ட நுழைவு வாயில்கள் மெம்பர் பெவிலியன் அவே டிரஸ்ஸிங் அறைக்கும் நோபல் பிராட்மேன் மெசஞ்சர் ஸ்டாண்டிற்கும் இடையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இங்கு நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா-டெண்டுல்கர் நுழைவாயில் வழியாக செல்லும் முதல் வெளிநாட்டு அணியாக பாகிஸ்தான் இடம் பெற உள்ளது.
சச்சினின் பிறந்தநாளில் நுழைவாயிலை திறந்தது ஏன்?
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டெண்டுல்கர் மற்றும் லாராவை கௌரவிக்கும் திட்டம் 2019-20 கோடையில் திட்டமிடப்பட்டது. அந்த சமயத்தில் இருவரும் ஆஸ்திரேலியாவில் ஒன்றாக இருந்தனர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது நடக்கவில்லை. பின்னர் கொரோனா காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது சச்சின் பிறந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 24) காலை, சிட்னி கிரிக்கெட் மைதானம் மற்றும் வென்யூஸ் நியூ சவுத் வேல்ஸ் தலைவர் ராட் மெக்கோ, சிஇஓ கெர்ரி மாதர் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய சிஇஓ நிக் ஹாக்லி ஆகியோர் நுழைவாயில்களை திறந்து வைத்தனர். வெளிநாட்டில் உள்ள பிரபல மைதானத்தில் டெண்டுல்கர் பெயரில் ஒரு நினைவிடம் அமைப்பது இதுவே முதல் முறையாகும்.