ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் சாத்விக் - சிராக் ஜோடி தோல்வி: இறுதிப்போட்டி வாய்ப்பு பறிபோனது
செய்தி முன்னோட்டம்
ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. சனிக்கிழமையான இன்று (நவம்பர் 21) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், இந்திய ஜோடி மலேசியாவின் மேன் வெய் சோங் - டீ காய் வுன் (Man Wei Chong - Tee Kai Wun) ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மலேசிய ஜோடி 21-18, 21-19 என்ற நேர் செட் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேர் செட்களில் வீழ்ந்தது இந்திய ஜோடி
இறுதிக்கட்டத் தடுமாற்றத்தால் கைநழுவிய வெற்றி
ஆட்டத்தின் முதல் செட் தொடக்கம் முதலே இரு ஜோடிகளும் சளைக்காமல் புள்ளிகளைக் குவித்ததால் ஒரு கட்டத்தில் 17-17 எனச் சமநிலை ஏற்பட்டது. ஆனால், இறுதிக்கட்டத்தில் நிதானமாக ஆடிய மலேசிய வீரர்கள் 21-18 என முதல் செட்டைத் தட்டிச் சென்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் சாத்விக் - சிராக் ஜோடி 7-3 என முன்னிலை பெற்று நம்பிக்கை அளித்த போதிலும், மலேசிய ஜோடி அடுத்தடுத்துப் புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இறுதியில் இந்திய வீரர்கள் போராடி 19-19 எனச் சமன் செய்த நிலையிலும், அடுத்த இரு புள்ளிகளைக் கைப்பற்றிய மலேசிய ஜோடி 21-19 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் வென்று ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
41 நிமிட போராட்டம்
முடிவுக்கு வந்த இந்தியாவின் பதக்க கனவு
சுமார் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி கடைசி நொடி வரை கடுமையாகப் போராடிய போதிலும் வெற்றியை வசப்படுத்த முடியவில்லை.
இந்தத் தோல்வியின் மூலம், ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பட்டம் வெல்லும் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.